நபீயவர்களின் அழைப்புக்குப் பதிலளிக்க வேண்டு..!!
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ
அல்லாஹ்வும், றஸுலும் உங்களை அழைத்தால் அவர்களுக்கு நீங்கள் பதில் கூறுங்கள்.
- திருக்குர்ஆன் : 08-24 -
அல்லாஹ்வும் றஸூலும் அழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறவேண்டுமென்பது பொதுவான கட்டளை. இக்கட்டளைப்படி நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும், அல்லாஹ்வும் தொழுது கொண்டிருப்பவனை அழைத்தால் அவன் உடனே தனது வேலையையும் வணக்கத்தையும் விட்டுவிட்டு அவர்களுக்குப் பதில் கூறுவது கடமையாகும். பதில் கூறாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றம்.
இத்திருவசனத்தின்படி வணக்கத்தில் இருப்பவன் கூடத் தனது வணக்கத்தை நிறுத்திவிட்டு நபீயின் அழைப்புக்கு பதில் கூறுவது கடமை என்பது தெளிவாகிவிட்டது.
நபீஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்புக்கு வணக்கத்தை விட்டுவிட்டு பதில் கூற வேண்டுமென்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பதினாலும் “புகஹா” மார்க்கச் சட்ட மேதைகள் சட்ட நூல்களில் கூறியிருப்பதினாலும் தொழுகை போன்ற பிரதான வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பது தெளிவாகிவிட்டது.
மேலே கூறிக்காட்டிய விவகாரத்தில் இருந்தும் நபீஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நம்போன்ற மனிதனில்லை என்பது தெளிவாகிவிட்டது.
வழிகேடன் நஜ்தியினதும், அவனின் முகவர்களினதும் கூற்றுப்படி நபீஸல் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனென்றால் தொழுகின்ற ஒருவனை நாம் அழைத்தால்க்கூட அவன் தொழுகையை விட்டுவிட்டு நமக்குப் பதில் கூற வேண்டுமல்லவா? அல்லது நபீ அழைத்தாலுங்கூட தொழுகையை விட்டுவிட்டு பதில் கூறக்கூடாதென்று சட்டம் வந்திருக்க வேண்டுமல்லவா?எங்கே சட்டம் இருக்கிறது? இதற்கு என்ன சொல்வார்கள்?
தொழுகை இறைவனுடன் வசனிக்கும் ஒரு மகோன்னத வணக்கமாகும். அவ்வணக்கத்தைக்கூட விட்டுவிட்டு நபீயவர்களின் அழைப்புக்குப் பதிலளிக்க வேண்டுமென்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதென்றால் அந்த நபீ நம்போன்ற சாதாரண மனிதன்தானா? என்பதை சிந்தித்துணர வேண்டும்.
அதான் ஒலிக்காத அண்ணல்
“அதான்” பாங்கு சொல்வதிலும்,“இமாமத்” இமாமாக நின்று தொழுகை நடத்துவதிலும் எது சிறந்ததென்ற கேள்விக்கு தொழுகை நடாத்துவதைவிட பாங்கு சொல்வதுதான் சிறந்ததென்று மார்க்கச்சட்ட மேதைகள் கூறுகின்றனர்.
எல்லாக் காரியங்களிலும் சிறந்ததைத் தெரிவு செய்து செயற்பட்டு வந்த நபீஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பாங்கு சொன்னதாக வரலாறு கிடையாது. எனினும் பல தடவைகள் இமாமாக நின்று தொழுகை நடத்தியிருக்கிறார்கள்.
எல்லாக் காரியங்களிலும் சிறந்ததைத் தெரிவு செய்து செயற்பட்டு வந்த நபீஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பாங்கு விஷயத்தில் செய்யாமல் விட்டதேன்? என்பதை ஆராய வேண்டும். அவர்கள் பாங்கு சொல்லாமல் விட்டதற்குக் காரணம் என்னவெனில் அவர்கள் பாங்கு சொன்னால் “ஹய்ய அலஸ் ஸலாஹ்” “ஹய்ய அலல் பலாஹ்” என்று சொல்ல வேண்டும்.
அதாவது தொழுகைக்கு வாருங்கள்;வெற்றியின் பக்கம் வாருங்கள் என்று அழைக்க வேண்டும். நபீயவர்கள் அவ்வாறு அழைத்தால் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்தின்படி அவர்களின் அழைப்பைக் கேட்டவர்கள் அனைவரும் தமது வேலைகளை விட்டுவிட்டு உடனடியாகத் தொழுகைக்கு விரைந்து சமூகமளிக்க வேண்டும். அவ்வாறு வருதல் தவிர்க்க முடியாத கடமையாகிவிடும். இதனால் உடனடியாகத் தொழுகைக்கு வரமுடியாத நிலையிலிருப்போர் அனைவரும் தண்டனைக்குரிய குற்றவாளியாகிவிடுவர்.
எனவேதான் பாங்கு சொல்வதால் மக்களுக்கு இத்தகைய சிரமம் ஏற்படுமென்பதை அறிந்த நபீஸல் அவர்கள் பாங்கு சொல்லாமல் தொழுகையை மட்டும் முன்னின்று நடத்தினார்கள். அவர்கள் “றஹ்மத்”உலக மக்களின் அருட்கொடை என்ற உண்மையை இது நிரூபித்துக் காட்டுகிறது.
இந்த விவரத்தின் மூலமாக நபீயவர்களின் அழைப்புக்குப் பதில் கூறுவது கடமையென்பது தெளிவாகிவிட்டது.
Comments
Post a Comment